BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Friday, September 19, 2008

நிகழ்ந்தாக வேண்டும்

நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்

நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்

பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே

எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்

உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!

முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள

மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு

Monday, September 8, 2008

பேய் கோபம்

















உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்

நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்

கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்

புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று

நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்

ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா

Tuesday, September 2, 2008

சிதறிய பிம்பங்கள்

 மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று

 அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்

 தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று

 ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?