Wednesday, June 24, 2009

இவள்=காகிதப்பூ


காற்றால் கிழிக்கப்பட்டு
கைகளால் நசுக்கப்பட்டு
வீசும் போது எல்லாம்
திசைகள் அறியா
செல்வதும்; கால்களால்
மிதிப்படுவதுமாய்
பிறவி கோலம்
இதுவென தொடர்வதும்
செய்த தீய்வினை தான்
என்ன ?
தீர்ப்பெழுதிய பேனாக்களில்
உடைந்து கிடக்கிறது
காகிதப் பூவிற்கான பதில்
புறம் தள்ளி வைக்கிறது
பூஜை அறை விதி

Wednesday, June 17, 2009

ஒரு நிழலின் கதை


நிழல் கொடுத்த இலைகள்
இங்கு விலகிக் கொண்டன
நிழல் மட்டும் எரிகிறது
மணற்தரையில்

இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு
அதனிலைகளின் கதையோடு

அவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்
இல்லை
மழை இந்த மண்ணைக்
கவ்வும்
என்பதை உணர மறந்து
காத்திருக்கிறது கடந்து போன
பாதங்களுக்கான கால்மிதியாய்

கடலில் காலச் சூரியன்
உறங்கி போன பின்னும்
இருள் உறவாக வந்த பின்னும்
காத்திருக்கிறது
இங்கு எப்போதும்
இலையுதிர் காலம்
என்பதை நினைவில் இழந்து
நிலையாகிறது நிழலங்கு

Saturday, May 30, 2009

தேடல்



ஆசைகளின் ஆதிக்கம்
நெருக்குதலில் தேவைகள்
பாரங்கற்களிடையே விழுந்து
கிடந்த நாட்களைத்
தகர்த்து எடுக்கையில்
கழிந்து முடிந்தது
ஒரு யுகத்தின் போர்

புழுவாய் உருப்பெறுகிறேன்
ஒவ்வொரு இரவும்
உணவொன்று தேடி
இன்றாவது அது
கிடைக்குமா என்று

Monday, May 25, 2009

இலையாக நீ



இந்த மொழியொன்று போதும்
வழியில் நானும் வருகிறேன்
உன்னோடு
போகும் இடமெல்லாம்
நீயும் வருவதாய் நினைவோடு

பூமியில் உன் பாதங்கள் இல்லை
மழையில் உன் நிறமும் இல்லை
வானில் நீயுமாய்
வண்ணக் கோடுகள்
தோன்ற; மறைய

விழி மட்டும் வழி கொண்டு
காற்றில் சுவாசங்கள் உள்ளவரை
நீ வருவதாய் நானும் தொடர
முடிந்து போகலாம் காலப் புள்ளிகள்
முடிவில் வளர்ந்தும் விடலாம்
இந்த விழுதுகள்

எது அதுவோ
நிகழ்கால இலையாய் இரு
என் நிழலுக்கு இப்போது

Wednesday, May 20, 2009

இன்றைய தினம்



என்றோ இறந்த உடல்
ஊர்க்கோலம் போகிறது
தெருவில் இன்று
வாழ்த்தொன்றை எழுதுகின்றாய்
கருகுமென்று தெரிந்தே

பதனிட்ட ரோஜாக்கள்
பரிசாக வரிசையில்
முள்ளுக்கு முத்தங்கள்
தந்து வழிகிறது
என் இதழ்லோரக் குருதி

மரணமுற்ற அறையொன்றில்
பிறந்ததினம்

சாம்பல் பூசிய மௌனத்தை
தொட்டுப் பார்க்க வருகிறது
உறவுகளின் வாழ்த்தோடு
தொலைப்பேசி அழைப்பு

இன்று நான் பிறந்ததாய்
ஓலமிட்டு அழுகிறது
உயிர் துறந்த
சுவர் கடிகாரத்தின்
விழிகள் இரண்டும்
என்னோடு

Thursday, April 23, 2009

ஒதுங்கல்




அவரவர் பாதை
அவரவர் பயணம்
உன்னை நினைத்தப் படி நானும்
என்னை மறந்தபடி நீயும்
ஒற்றைக் குடையொன்றில்
கண்ணீரைச் சேகரிக்கும்
என் பூமி


நீ வாழ

மரங்களுக்குப் பின்னால் நின்று
மறைகிறது என் நிழல் கூட இன்று



Tuesday, March 31, 2009

நீயும் நானும்


தலையணைக்குள் தொலைந்தவைகளை
மீண்டும் தேடி எடுக்கிறேன்
படுக்கை மீது
பரிதாபமாய் சிதறி கிடக்க
கைகள் தருகிறேன்;
சேர்த்து அணைக்கின்றேன்
நான் தலைகோத
உயிர்த்தெழுகிறாய் நீ
என் மடி மீது
உணர்வுகளாய்..

Thursday, March 19, 2009

பேசும் சித்திரங்கள்



சுவரில்லாமல் சித்திரங்கள் நான்
வரையத் தொடங்கிய பொழுதொன்றில்

இருள் சூழ
எங்கோ மறைந்து போயின அவை

பின் என் நிழலுக்குப் பின்னால்
நின்று பேருருவம் கொண்டு
சிரிக்கத் தொடங்கியது
தன்னை ஓர் எஜமானி என்று
சொல்லிக் கொண்டது

தன் கர்வம் தீர
என்னை
முழுதும் தின்று விழுங்கியது

மூச்சடைத்து நான்
இறந்த போது

கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று கோசமிட்டு

நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்
..

Sunday, March 15, 2009

உனக்காக நான்




யாரோ செய்த காயம்
முட்களை உன் மீது தினம்

எறிந்துவிட்டேன்
காற்றில் அவை உன்னை
தீண்டும் போதெல்லாம்
வெயில் தரையில்
விழுந்த புழுவாய் துடிக்கிறேன்
கடந்து தவிக்கிறேன்

தொடரும் என் பாவங்களைத்
தோண்டிப் புதைக்க
இடம் ஓர் உண்டா?
இருந்தால்

அங்கே விழுந்து சாவேன்
உனக்காக

மண்ணுக்கும் நோகாமால்
முட்களை எல்லாம்
என் உடல் மீது எய்தி

மீண்டும் ஒரு ஜென்மம்
இருந்தால்
உன் வீட்டு
மலருக்கு உரமாகி

எச்சில் நீ உமிழ்ந்தாலும்
மயிலிறகால்
உன் பாதங்கள்
ஏந்தி நிற்க
இறைவனிடம் .
ஒரு வரம் கேட்பேன்



*நட்பைக் காயம் செய்ததற்காக இந்தக் கவிதை சமர்ப்பணம்.

*கண்ணீரைக் கவிதையின் முற்றுப் புள்ளியாக்குகிறேன் உனக்காக நான். மன்னிப்பாயா?

Tuesday, March 3, 2009

ஓர் அக்னி இரவு




ஓர் அக்னி இரவில்
தோன்றிய கனவு
கதற கதற
நெரிக்கப் பட்டது கழுத்து
விழிகளில் குருதி வழிய
உடலெங்கும் நக கீறல்கள்
பலத்தக் காயத்திற்கு உட்பட்ட
உடல் மீது எறியப்பட்டது
திரவமொன்று

கனவில் பொசுங்கிய நான்
இறுதி சடங்கில் மௌனமாய்
உன் கைகளைப் பற்றி பிரிய

அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்