BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, August 19, 2008

ஏய் மழையே



துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
வெட்கத்தில் சிவக்க

கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க

உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே

நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
என் தேகமெங்கும்
மெய் எழுதிப் போ
வெள்ளை மையில்

Friday, August 15, 2008

கொலை முயற்சி




அன்றே
நான் இறந்ததாய்
சில மலர்
வளையங்களைச்
செலுத்தி இருப்பாய்
இன்னும் பெயரிடாதாய்
அந்தக் கல்லறைகளில்
அங்கே என்னைத்
தேடியும்
தொலைத்திருப்பாய்
தீராத சந்தேகம்
தீர்க்க வரும்
தேடல்களில்

வார்த்தைகளால்
என் உடலெங்கும்
பிரம்ம அஸ்திரங்கள்
தொடுக்கவும்
முயற்சிக்கிறாய்

அவை
என் இறப்பை
உறுதி செய்ததாய்
மீண்டுமொரு நிம்மதி
பெரும் மூச்சுக்
கொள்கிறாய்
இறந்து பிறக்கும்
என் காதலில்!

Thursday, August 14, 2008

ஒர் அழைப்பு



என்னை நான்
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு

தூர தேசத்தில்
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
செல்லும்
ஒர் தேவதையின்
அழைப்பு

Thursday, August 7, 2008

இதுவும் நட்புதான்



நரம்பறுந்த வீணையிலிருந்து
மீண்டும் இசை மீட்க முயலும்
உன் விரல்களை விரும்பியே
தவிர்க்கிறேன் தோழி
குற்றமாய் நீ வீசும்
பார்வைகளிலிருந்து

என் நட்பு களங்கப்பட
வேண்டாமென வேண்டி
உன் பயணங்களாவது
குற்றமற்றதாய் விளங்கட்டும்
என்று வாழ்த்தி !

அவளும் பெண் என்பதால்




உன் புது துணைக்கான
தேடல்கள் ஒவ்வொரு
முறையும் நீ
தொடங்கும் போது
என் உயிர் அறைகள்
மரணம் சம்பவிப்பதாய்
கனவில் வரும்
உன் தாயிடம் சொல்

பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்

நீயாக வந்து பிடுங்கினாலும்
மீண்டும் விழுதாய் பிறக்கும்
உன் மேல் நான் கொண்ட
நேசத்தின் வேர்களை
காற்றில் கலந்த
உன் தாய் அவள்
மட்டுமே அறிவாள்
மறைந்த பொழுதில்
நீ என்னை நேசிப்பதாய்
மொழிந்த வரிகளை