BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, May 25, 2010

உனதசைவில் என் பரிமாணங்கள்



உயிரெனும் உளியால்

உனை வதைத்து; உடல் வருத்தி

உருக்கொண்டு; உயிர்க்கொண்டு

நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து

உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்

என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்

Tuesday, May 11, 2010

பரிகாசம்


முட்களாய்; கற்களாய்

இதயத்தைத் துளையிடும் அம்புகளாய்

நீங்கள் எறிந்த சொற்களில்

கலங்கி நிற்கிறது

அந்த சிறு ஓடை

தெறித்து விழுகிறது

ஓரிரு துளிகள்

அனலாய் பூமியில்

சமயத்தில் இந்த இயலாமையில்

அங்கேயே; அப்படியே அமிழ்ந்தும்
போகின்றன அவைகள்
இறைவனை சபித்தபடி

Friday, May 7, 2010

தலையணைக் கவிதையும் தங்கிவிடும் காதலும்



தனிமை தாங்கியே
வருகிறது இன்றைய
இரவும்

குருதி வழியும் இதழும்
பசலை பற்றிய விழியிலும்
வந்து நிற்கும் உன் உருவம்
அந்த திசையொன்றின்
மறைவில் நீ வாழ்வதாய்
செய்தியொன்றை கொண்டு வந்து
சேர்க்கிறது அறை இருளோடு
உன்னை துரத்தி
உன்னை விலக்கி
உன்னை மறந்து
இமைகளில் நீ படர்ந்திருப்பதை அறிந்து
நீ இல்லாத இடம்
தேடி பயணிக்கிறது
என் சில இரவு கவிதைகள்

மீண்டும் நாளை
எந்த நிறுத்தத்தில்
உன்னை சந்திப்பேன்; பிரிவேன் என்ற
வழக்கமான சில வினாக்களுடன்.....

Thursday, April 8, 2010

இடைவெளியில் ஒரு தியானம்



நீள்கிறது இடைவெளி

நமக்கான இரவுகள்

நமக்கான கனவுகள்

நமக்காக காத்திருப்பதும்

நாம் அதற்காக விழித்திருப்பதும்

அழகாய் தான் உள்ளது

இந்த பெருவெளி

ஒரு மொட்டின் மௌனத்தைப் போன்று

Tuesday, April 6, 2010

உள்ளங்கைகள்



உன் இருப்பு என்னோடு
உள்ளங்கைகள் போன்றது
அவைகள் தரும் மென்மையில்
கோடுகள் இணையும் மத்தியில்
கடவுள் அங்கு வாழ்வதாய் ஐதீகம்

என்னுள் கடந்து செல்லும்
உன்னை அங்குதான் கண்கிறேன்
இமை கொள்ளாமல்

விழிக்கொண்ட தேடலில்
மௌனம் தோய்ந்த கன்னத்தை
தாங்கி நிற்கும் இதழாய்
என்னோடு பேசும்
இன்னொரு மொழியாய்
இங்கு தான் துயில்கிறாய்

தூரமொன்றும் இல்லை
எல்லையில் நான் சுமக்கும்
உன் என் இதயம்



Saturday, March 27, 2010

நான்கு கண்களின் கனவுகள்



வார்த்தைகளால் தொடுவதும்
மௌனங்களால் முத்தமிடுவதும்
காற்றலைகளால் பகிர்கிறோம்
உயிர் மூச்சை

உன் முகம் பற்றி அலைகிறதென்
என் கண்கள்
ஒவ்வொரு முறையும்
பயணிக்கிறாய் என்னுடன்

எந்த தீவில் பிறந்தாயோ
எந்த வீதியில் இணைவோமோ
மறைந்து தினம் மலர்கிறது நேசம்
பாதசுவடோடு சேர்ந்து விழுகிறது
பின் விலகி நகர்கிறது
உருவமற்ற நிழலாய் நம் பயணம்

நிரம்ப உணர்கிறேன் உன் நேசம்
காற்று மட்டுமே நிரப்பி விடுகிறது
உன் அணைப்பை

நாட்கள் கடக்க; மாதம் கடக்க
கடந்து கொண்டே இருக்க
நான்கு கண்களின் கனவுகளும்
வழி நெடுகிலும் வலியோடு
சுமந்து வருகிறது இந்த பொழுது
உன்னோடும் என்னோடும்

இரவும்; இரவோடு சேர்ந்த பகலையும்
எந்த தேசத்தில்
என்னோடு சேர்ந்து காண்பாய்

என் கழுத்து வரை இந்த கவிதையில் நீ
உன் கனவுகளின் தேடலில் நீ
மௌனிக்கிறது உயிர் அன்பு
வானமற்ற நிலவாய்...

Wednesday, June 24, 2009

இவள்=காகிதப்பூ


காற்றால் கிழிக்கப்பட்டு
கைகளால் நசுக்கப்பட்டு
வீசும் போது எல்லாம்
திசைகள் அறியா
செல்வதும்; கால்களால்
மிதிப்படுவதுமாய்
பிறவி கோலம்
இதுவென தொடர்வதும்
செய்த தீய்வினை தான்
என்ன ?
தீர்ப்பெழுதிய பேனாக்களில்
உடைந்து கிடக்கிறது
காகிதப் பூவிற்கான பதில்
புறம் தள்ளி வைக்கிறது
பூஜை அறை விதி

Wednesday, June 17, 2009

ஒரு நிழலின் கதை


நிழல் கொடுத்த இலைகள்
இங்கு விலகிக் கொண்டன
நிழல் மட்டும் எரிகிறது
மணற்தரையில்


இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு
அதனிலைகளின் கதையோடு



அவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்
இல்லை
மழை இந்த மண்ணைக்
கவ்வும்
என்பதை உணர மறந்து
காத்திருக்கிறது கடந்து போன
பாதங்களுக்கான கால்மிதியாய்



கடலில் காலச் சூரியன்
உறங்கி போன பின்னும்
இருள் உறவாக வந்த பின்னும்
காத்திருக்கிறது
இங்கு எப்போதும்
இலையுதிர் காலம்
என்பதை நினைவில் இழந்து
நிலையாகிறது நிழலங்கு

Saturday, May 30, 2009

தேடல்


ஆசைகளின் ஆதிக்கம்
நெருக்குதலில் தேவைகள்
பாராங்கற்களிடையே விழுந்து
கிடந்த நாட்களைத்
தகர்த்து எடுக்கையில்
கழிந்து முடிந்தது
ஒரு யுகத்தின் போர்
புழுவாய் உருப்பெறுகிறேன்
ஒவ்வொரு இரவும்
உணவொன்று தேடி
இன்றாவது அது
கிடைக்குமா என்று

Monday, May 25, 2009

இலையாக நீ


இந்த மொழியொன்று போதும்
வழியில் நானும் வருகிறேன்
உன்னோடு
போகும் இடமெல்லாம்
நீயும் வருவதாய் நினைவோடு

பூமியில் உன் பாதங்கள் இல்லை
மழையில் உன் நிறமும் இல்லை
வானில் நீயுமாய்
வண்ணக் கோடுகள்
தோன்ற; மறைய

விழி மட்டும் வழி கொண்டு
காற்றில் சுவாசங்கள் உள்ளவரை
நீ வருவதாய் நானும் தொடர
முடிந்து போகலாம் காலப் புள்ளிகள்
முடிவில் வளர்ந்தும் விடலாம்
இந்த விழுதுகள்

எது அதுவோ
நிகழ்கால இலையாய் இரு
என் நிழலுக்கு இப்போது