BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Thursday, September 12, 2013

அப்பா நீங்கள் இருந்திருந்தால்.......



இன்று வரை ஊனப்பட்டு தான் 
கிடக்கிறது என் வீடு
அவரின் காலடியோசைகளின்றி
விறகுகளால் வெந்து மறைந்த 
உடலையும் 
கற்பூரங்களால் கரைந்த ஊயிரையும் 
தேடியலைகிறது மனம் 

யார் யாரோ வந்து போக
யார் யாரோ உரிமைகளை
உரிமையாய் பகிர
கேள்வி பதில்களுக்கும்
இடமில்லாமல் போயிருக்கும்
நீங்கள் இருந்திருந்தால்…

வாழ்வு இன்னொரு
பரிமாணத்தில் எனக்காக
நகரும் தருணங்களில்
இழப்பு என்பது இவ்வளவு
துயர் நிறைந்த்தா…
இன்றுதான் அதன் முழுமையை
உணர்கிறேன்..

Monday, February 28, 2011

பறவைகளாகிப் போனோம்





இந்த இரவையும்


இந்த இரவைச் சார்ந்த நிலவையும்


நீயோர் திசையும்


நானோர் திசையும் உணர


காரணம் எதுவாக இருக்கும்


இமைகளுக்குள் இரு நிலவுகளின்


கண்ணாமூச்சி


காரணம் அதுவாக தான் இருக்கும்

Sunday, November 21, 2010

நீ இருந்தும்



நீ இருந்தும் ...
கண்களில் தூசி விழுகின்றன
நிலாக்களற்ற இரவுகளே வருகின்றன
மௌனங்கள் மொழியாகின்றன
வார்த்தைகள் பொருளற்று
வீழ்கின்றன
நீ இருந்தும்...

பதில்களற்ற கேள்விகளாய்
பாதைகளற்ற பயணங்களாய்
உயிருள்ள பிணமாய்
பசியற்று உண்ணுக்கிறேன்
உன் தெருக்களில்
நீ இருந்தும்...

இப்படி தான் விடியுமோ
என் வாசற் சூரியன் இனி
நீ இருந்தும்....
நான்.... நான்.... நான் மட்டுமே
நீ இருந்தும்...

Tuesday, October 26, 2010

அயல்



உறவுகளை அறுத்தெறியும்

ஆயுதம் ஒன்றை

செய்யத் தொடங்குகிறேன்

நள்ளிரவுதோரும்

அது முழுமை பெறும்

ஒரு பகலிலோ ஓர் இரவிலோ

அன்று நான் அயலாகி இருப்பேன்

நிலம் விட்டு நீங்கி; நீரற்று

நீளும் வேர் போல

Tuesday, September 28, 2010

முத்தங்களும் யுத்தங்களும்




வாழ்க்கையின் தூரங்களைத்
தொலைத்துவிட்டு
நானும் வருகிறேன்
உனது பயணங்களில்
தோள் கொடு நான் சாய

தொலைந்த கனவுகளை
கொஞ்சம் மீட்போம் வா
ஒவ்வொரு முத்தங்களோடும்
பிரித்து சேர்த்த
ஒவ்வொரு யுத்தங்களோடும்

மடித்தருவாயா
நான் குழந்தையாகி போக
தனிமை தின்ற தினங்களிளெல்லாம்
இன்னொரு தாயாக

Tuesday, September 7, 2010

வானம் தேடி


வானம் சென்று
உனக்காக சேமித்த
பனித்துளிகள் எல்லாம்
கரிக்க தொடங்கி கொண்டிருக்கின்றன
நான் இரவை
சபித்துக் கொண்டிருக்கிறேன்
நீ நிலவில்
பயணித்துக்கொண்டிருக்கிறாய்
புழுதியில் அமிழ்ந்து
போகின்றன பனித்துளிகள்
ஒவ்வொன்றும்
இந்த பொழுதும்
இழந்தாகி விட்டது
தத்தம் வீடு திரும்புகிறோம்
அவரவர் இயல்போடு
எனக்கான இசையை வழங்கி
கொண்டிருக்கிறது வானொலி
நான் பறவையாகி போகிறேன்
மீண்டும் வானம் தேடி

Wednesday, July 28, 2010

அபாயக் குறிகளோடு அவள் நெருங்குகிறாள்



ஒற்றைக் காடொன்றைத் தேடுகிறேன்
கண்ணாடி ஒளிரும் மரங்களுக்குள்
நகர வீதியில் நச்சுவாயூ
உயிரற்ற ஊர்வனங்களோடு

நான்கு சுவருக்குள் கரியமிலவாயு
நான் சுவாசிக்க மீண்டு திரும்புகிறது
உனது பிராணமாக

உன் நாசி துவாரங்களில்
துளையிட்டு நுழையும்
என் மூச்சு
உனது நுரையீரல்களில்
கலந்து கசிக்கிறது
காண்ணாடி பேழைக்குள்
குளு குளு கருவியோடு
மூச்சும்; பேச்சும் இயந்திரமாகி
மூலைக்கொன்றாய் கிடக்கிறோம்

வயிறு பிழைக்க ;வாழ்வு தழைக்க
மருந்திட்ட தட்டான்களாய்
மாறிப் போயிருக்கும் நம் தேகம்
துர்தேவதைகளின் வாசத்தை
ஆணும் பெண்ணுமாய்
உடலெங்கும்
தெளித்து; நுகர்ந்து பூசிக்கொள்ள
அழுகி கொண்டிருக்கிறது
நிலவு பூமி

பதறி துடிக்கிறாள்
இயற்கை அன்னை
பாவம் தன் கற்பு
களவாடப்பட்டுகொண்டிருக்கிறதென்று
யாருக்கும் கவலையில்லை
யாரும் கேட்பதும் இல்லை
அழுது ஓலமிடும்
அவளது கதறலை

சிதைந்த உடலோடு
சீற்றம் கொண்ட அரக்கியாய்
உருக்கொள்ள தொடங்கியிருக்கிறாள்
ஆயுதம் வீசி
அவ்வப்போது சில
அபாயக் குறிகளோடு

இப்போழுது கேட்க
தொடங்கியிருக்கின்றன
உங்களின் ஓலங்கள்
அவரவர் வீடுகளில்

இன்று அவளது செவிகள்
ஊனமாக்கப்பட்டிருப்பதை
மறந்து

Tuesday, July 20, 2010

காலச் சிலுவைகள்



கடிக்கார முட்கள்
விஷமாகி கொண்டிருக்கின்றன
காத்திருத்தலின் வலிகளோடு;
இதயம் நுழைந்து
விழி சேராது ப்பிரியங்களில்
நிறைந்து நீள்கிறது
நிலாக்கள் அற்ற இரவுகள்

கூடுகள் காணாத பறவையென
நம்மிருப்பு
நாட்களின் நகர்வுகளில்
நரகமாகி கிடக்க
நிகழ்காலங்களை விற்று
எதிர்காலத்திற்குள்
இறந்து கிடக்கிறோம்
வண்ணத்துப்பூச்சிகளாய்

நீ நீயாக நான் நானாக
யாரும் அறியா வண்ணம்
கண்ணீர் துளிகளுக்குள்
இன்னும் எழுதப்படாத
நம் கடிதங்களின்
கடைசி வார்த்தைகளில்
என்றும் அன்புடன்
நான் உனக்காக

Sunday, June 13, 2010

பழகிய நட்பும் பழைய செருப்பும்




அங்கிருந்து அகன்றபடி என் கால்கள்
கழட்டி வைத்த நட்போடு
நீ நடப்பதையும்; கடப்பதையும்
கவனித்தப்படி சிரிக்கிறது
உன் வீட்டு பழைய செருப்பொன்று
இன்று மெல்ல மெருகேறியிருக்கின்றன
உன் பாதங்கள் வேரொன்றுடன்

Tuesday, May 25, 2010

உனதசைவில் என் பரிமாணங்கள்



உயிரெனும் உளியால்

உனை வதைத்து; உடல் வருத்தி

உருக்கொண்டு; உயிர்க்கொண்டு

நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து

உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்

என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்