BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, June 24, 2009

இவள்=காகிதப்பூ


காற்றால் கிழிக்கப்பட்டு
கைகளால் நசுக்கப்பட்டு
வீசும் போது எல்லாம்
திசைகள் அறியா
செல்வதும்; கால்களால்
மிதிப்படுவதுமாய்
பிறவி கோலம்
இதுவென தொடர்வதும்
செய்த தீய்வினை தான்
என்ன ?
தீர்ப்பெழுதிய பேனாக்களில்
உடைந்து கிடக்கிறது
காகிதப் பூவிற்கான பதில்
புறம் தள்ளி வைக்கிறது
பூஜை அறை விதி

Wednesday, June 17, 2009

ஒரு நிழலின் கதை


நிழல் கொடுத்த இலைகள்
இங்கு விலகிக் கொண்டன
நிழல் மட்டும் எரிகிறது
மணற்தரையில்


இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு
அதனிலைகளின் கதையோடுஅவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்
இல்லை
மழை இந்த மண்ணைக்
கவ்வும்
என்பதை உணர மறந்து
காத்திருக்கிறது கடந்து போன
பாதங்களுக்கான கால்மிதியாய்கடலில் காலச் சூரியன்
உறங்கி போன பின்னும்
இருள் உறவாக வந்த பின்னும்
காத்திருக்கிறது
இங்கு எப்போதும்
இலையுதிர் காலம்
என்பதை நினைவில் இழந்து
நிலையாகிறது நிழலங்கு

Saturday, May 30, 2009

தேடல்


ஆசைகளின் ஆதிக்கம்
நெருக்குதலில் தேவைகள்
பாராங்கற்களிடையே விழுந்து
கிடந்த நாட்களைத்
தகர்த்து எடுக்கையில்
கழிந்து முடிந்தது
ஒரு யுகத்தின் போர்
புழுவாய் உருப்பெறுகிறேன்
ஒவ்வொரு இரவும்
உணவொன்று தேடி
இன்றாவது அது
கிடைக்குமா என்று

Monday, May 25, 2009

இலையாக நீ


இந்த மொழியொன்று போதும்
வழியில் நானும் வருகிறேன்
உன்னோடு
போகும் இடமெல்லாம்
நீயும் வருவதாய் நினைவோடு

பூமியில் உன் பாதங்கள் இல்லை
மழையில் உன் நிறமும் இல்லை
வானில் நீயுமாய்
வண்ணக் கோடுகள்
தோன்ற; மறைய

விழி மட்டும் வழி கொண்டு
காற்றில் சுவாசங்கள் உள்ளவரை
நீ வருவதாய் நானும் தொடர
முடிந்து போகலாம் காலப் புள்ளிகள்
முடிவில் வளர்ந்தும் விடலாம்
இந்த விழுதுகள்

எது அதுவோ
நிகழ்கால இலையாய் இரு
என் நிழலுக்கு இப்போது

Thursday, March 19, 2009

பேசும் சித்திரங்கள்


சுவரில்லாமல் சித்திரங்கள் நான்
வரையத் தொடங்கிய பொழுதொன்றில்

இருள் சூழ
எங்கோ மறைந்து போயின அவை


பின் என் நிழலுக்குப் பின்னால்
நின்று பேருருவம் கொண்டு
சிரிக்கத் தொடங்கியது
தன்னை ஓர் எஜமானி என்று
சொல்லிக் கொண்டது

தன் கர்வம் தீர
என்னை
முழுதும் தின்று விழுங்கியது

மூச்சடைத்து நான்
இறந்த போது

கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று கோசமிட்டு

நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்
..

Tuesday, March 3, 2009

ஓர் அக்னி இரவு

ஓர் அக்னி இரவில்
தோன்றிய கனவு
கதற கதற
நெரிக்கப் பட்டது கழுத்து
விழிகளில் குருதி வழிய
உடலெங்கும் நக கீறல்கள்
பலத்தக் காயத்திற்கு உட்பட்ட
உடல் மீது எறியப்பட்டது
திரவமொன்று

கனவில் பொசுங்கிய நான்
இறுதி சடங்கில் மௌனமாய்
உன் கைகளைப் பற்றி பிரிய

அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்

Monday, January 19, 2009

அந்திசில்லென்ற நதியில்
சிணுங்கும் தென்றல்
கலகலவென இலைகள்
சிரிக்க…

திட்டு திட்டாய்
பாதச் சுவடுகள்
பட்டும் படாமல்
ஏந்தி நிற்கும் மணல்வெளி

வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது

பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு