BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, November 19, 2008

தூரப் போ...

ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?

சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....

அவைகளாவது சிரிக்கட்டுமே

Thursday, October 30, 2008

நினைவில் மட்டுமே




• ஆழ்ந்த உறக்கத்தில் அப்பா
துக்கத்தில் ஆழ்ந்து விட்ட வீடு
சிரித்துக் கொண்டே நுழைந்தன
மலர்வளையங்கள்

• அறையில் அழுது
கொண்டிருக்கும் அம்மா
சுவரில் மௌனமாய் சிரித்துக்
கொண்டிருக்கும் அப்பா
தன் நெற்றிப் பொட்டை
அப்பாவின் நிழல் படத்தில்
இடும் அம்மா.

• இன்றும் அப்பாவின் உழைப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கின்றன
வாசலில் கிடக்கும்
அவரின் தேய்ந்த செருப்புகள்

• பள்ளிக்கு வழியனுப்பி வைத்த
அப்பாவை
முட்கள் குத்திய வலியோடு
கல்லறைக்கு வழியனுப்பி
நின்றன கால்கள்

• நிம்மதியை எடுத்துக் கொண்டு
நிம்மதியாய் உறங்கும் அப்பா
கனவில் வந்து போனாலும்
வருவது அப்பா என்பது தான் நிஜம்.

• உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"

Friday, September 19, 2008

நிகழ்ந்தாக வேண்டும்

நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்

நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்

பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே

எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்

உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!

முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள

மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு

Monday, September 8, 2008

பேய் கோபம்

















உணர்வுகளை அறுத்து
வழியும் கண்ணீர்

நாவில் கசியும்
நஞ்செல்லாம்
மௌனக் குடத்தில்
ஏந்தி நிற்கும் உதடுகள்

கண்டனங்களை
எழுதவரும் கைகளை
வெட்டியெறியும் விரல்கள்

புலன்களின் வேர் பிடுங்க
முளைத்து கொண்டு வளர்கிறது
பேய் கோபம் ஒன்று

நீ தரும் உணவுகளைத்
தின்று தின்று
கோர பற்களால் குத்தி
கனவுகளைப் பலிக் கொடுக்க
காத்திருக்கும் என்னுள்

ஒதுங்கி நின்று அழுகிறது
ஓர் ஆத்மா

Tuesday, September 2, 2008

சிதறிய பிம்பங்கள்

 மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று

 அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்

 தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று

 ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?

Tuesday, August 19, 2008

ஏய் மழையே



துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
வெட்கத்தில் சிவக்க

கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க

உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே

நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
என் தேகமெங்கும்
மெய் எழுதிப் போ
வெள்ளை மையில்

Friday, August 15, 2008

கொலை முயற்சி




அன்றே
நான் இறந்ததாய்
சில மலர்
வளையங்களைச்
செலுத்தி இருப்பாய்
இன்னும் பெயரிடாதாய்
அந்தக் கல்லறைகளில்
அங்கே என்னைத்
தேடியும்
தொலைத்திருப்பாய்
தீராத சந்தேகம்
தீர்க்க வரும்
தேடல்களில்

வார்த்தைகளால்
என் உடலெங்கும்
பிரம்ம அஸ்திரங்கள்
தொடுக்கவும்
முயற்சிக்கிறாய்

அவை
என் இறப்பை
உறுதி செய்ததாய்
மீண்டுமொரு நிம்மதி
பெரும் மூச்சுக்
கொள்கிறாய்
இறந்து பிறக்கும்
என் காதலில்!

Thursday, August 14, 2008

ஒர் அழைப்பு



என்னை நான்
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு

தூர தேசத்தில்
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
செல்லும்
ஒர் தேவதையின்
அழைப்பு

Thursday, August 7, 2008

இதுவும் நட்புதான்



நரம்பறுந்த வீணையிலிருந்து
மீண்டும் இசை மீட்க முயலும்
உன் விரல்களை விரும்பியே
தவிர்க்கிறேன் தோழி
குற்றமாய் நீ வீசும்
பார்வைகளிலிருந்து

என் நட்பு களங்கப்பட
வேண்டாமென வேண்டி
உன் பயணங்களாவது
குற்றமற்றதாய் விளங்கட்டும்
என்று வாழ்த்தி !

அவளும் பெண் என்பதால்




உன் புது துணைக்கான
தேடல்கள் ஒவ்வொரு
முறையும் நீ
தொடங்கும் போது
என் உயிர் அறைகள்
மரணம் சம்பவிப்பதாய்
கனவில் வரும்
உன் தாயிடம் சொல்

பெண் என்பதால்
அவளுக்கே புரியும்
சிதைந்த என் இதயத்தின்
வலிகளும்
அதில் இரத்தம்
ஒழுகும் உன் நினைவுகளும்

நீயாக வந்து பிடுங்கினாலும்
மீண்டும் விழுதாய் பிறக்கும்
உன் மேல் நான் கொண்ட
நேசத்தின் வேர்களை
காற்றில் கலந்த
உன் தாய் அவள்
மட்டுமே அறிவாள்
மறைந்த பொழுதில்
நீ என்னை நேசிப்பதாய்
மொழிந்த வரிகளை

Wednesday, July 16, 2008

மழை


ஈரமற்ற
இதயங்களுக்காகப்
பெய்து கொண்டிருக்கும்
மழை.

Tuesday, July 15, 2008

HIV குழந்தைகள்


முள்ளோடும் பிறந்தாலும்
ரோஜாக்கள் சிரித்துக்
கொண்டு தான் இருக்கின்றன

Tuesday, June 24, 2008

தூரத்தில் தோழி



தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்

பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்

தவிக்கும் பாதங்களுக்கிடையில்

Tuesday, May 27, 2008

உறவுகள்


Friday, May 16, 2008

அம்மா

Tuesday, May 6, 2008

அன்புள்ளக் கடவுளுக்கு



அன்புள்ளக் கடவுளுக்கு,
இதுதான் இறுதி என்று
எழுதுகிறேன்..
எத்தனை முறை எழுதுவது
கடிதம் உனக்கு?

பிரிக்கப்படாமலும் படிக்கப்படாமலும்
கிடக்கின்றன அவை
முகவரியே நீ தான்
தர மறுக்கிறாய்
உள்ளே இருந்து கொண்டு
வர மறுக்கிறாய்
நீ யார் என்ற போருக்குள்
யார் நீ என்ற கேள்விகளுக்குள்
விரிந்துகொண்டே போகிறாய்
அழுகையை மட்டும்
உனக்கும் எழுதிவைக்கிறேன்
நீ தான் பொறுப்பென்று
சுகத்தை எனக்குள்
பதுக்கி வைக்கிறேன்
நிரந்தரமென்று
எதையும் பொருட்படுத்தாத
உன் மௌனத்தைக் கண்டு
என் பேனா முனைகள்
உடைகின்றன
தூர வீசுகின்றேன்
கோபம் களைந்து
மீண்டும் எழுதுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்க
ஒரு கடிதம்
இதுதான் இறுதியென்று...
இப்படிக்கு,
என்றும் நான்

Friday, April 4, 2008

ஒன்று

ஒரு நிமிடம் போதும்
ஒரு சொல் போதும்
ஒரு பார்வை போதும்
ஒரு பகல் போதும்
ஒரு இரவு போதும்
ஒரு நிலவும் போதும்
ஏதோ ஒன்றை நிகழ்த்த

எதையாவதை இழக்க
எதையாவதை கொடுக்க
எதையாவதை விரும்ப
எதையாவதை வெறுக்க
ஏதோ ஒன்று போதும்!



Friday, March 28, 2008

மௌனமும் மரணமும்

* கொன்று சாய்ப்பது
மரணம் மட்டுமல்ல
சிலரின் சிலசமய
மௌனங்களும் தான்